Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 ஜனவரி (ஹி.ச.)
ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய 27 உறுப்பு நாடுகளை கொண்ட அமைப்பு ஐரோப்பிய யூனியன் என்பதாகும்.
அந்த வகையில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு, 2007-ல் துவங்கி, 2013 வரை பல சுற்றுகளாக நடைபெற்று வந்தது. ஆனால், கார், மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப இந்திய நிறுவனங்களுக்கான தரவு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் விதிகள் போன்ற விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பேச்சு நின்று போனது. கடந்த 2022 ஜூனில் மீண்டும் அதிகாரப்பூர்வ பேச்சு துவங்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளது.
குடியரசு தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக இந்தியா வந்துள்ள ஐரோப்பிய யூனியனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது.
பின்னர், இந்தியா- ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களுக்கு தாய் எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இதனை அறிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரும்பாலான பொருட்களுக்கு பரஸ்பரம் இருநாடுகளும் இறக்குமதி வரியை நீக்கும். இந்த ஒப்பந்தம் 2027ல் இருந்து அமலுக்கு வரும்.
இந்த ஒப்பந்தம் குறித்து, சமூகவலைதளத்தில் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறியதாவது:
ஐரோப்பாவும் இந்தியாவும் இன்று வரலாறு படைக்கின்றன. அனைத்து ஒப்பந்தங்களின் தாய் ஒப்பந்தத்தை நாங்கள் நிறைவு செய்து இருக்கிறோம். இரு தரப்பினரும் பயனடைவார்கள். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. எங்கள் உறவை இன்னும் வலுவாக வளர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b