Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஜனவரி (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலமான ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 முடிய, கடல் ஆமைகள் முட்டையிடும் தமிழ்நாடு கடற்பகுதியில் அவற்றை பாதுகாத்திடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அவற்றுள் முக்கியமாக கடற்கரையிலிருந்து 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடிவிசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும். கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் 10 குதிரை திறனுக்கும் அதிகமான திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட பாரம்பரிய மீன்பிடி படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும் மற்றும் திருக்கை மீன் வலைகள்' பயன்படுத்துவதையும் தடைசெய்யதுள்ளது.
மேலும், கடல் ஆமைகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுவின் (Nodal Task Force) வழிகாட்டுதல்களின்படி, கூட்டு ரோந்து மேற்கொள்ளப்பட்டும் மற்றும் 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகளின் இயக்கத்தினை ISRO டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட நப்மித்ரா இணையவழி செயலி மூலம் கண்காணித்தும், கடல் ஆமைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
மேற்கண்ட ரோந்து மற்றும் கடுமையான கண்காணிப்பின் அடிப்படையில், விதிமுறைகளை மீறி செயல்படும் மீன்பிடி படகுகள் மீது தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
மேலும், வனத்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோர காவற்படை, மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்களை இணைத்து, மீனவ கிராமங்களில் கடல் ஆமை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆமைகளின் நடப்பு இனப்பெருக்க காலகட்டத்தில் இதுபோன்ற 270 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
மேற்கண்ட கடல் ஆமை பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாமல், ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல், மீனவர்களின் மீன்பிடி இழுவலைகளில் சிக்கும் ஆமைகள் பாதுகாப்பாக வெளியேற வழிவகுக்கும் ஆமை விலக்கு சாதனம் (Turtle Excluder Device) கொச்சியிலுள்ள ஒன்றிய மீன்வள தொழில்நுட்ப நிலைய (CIFT) உதவியுடன் வடிவமைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள மீன்பிடி இழுவலைப்படகுகளுக்கு விலையில்லாமல் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக 50 மீன்பிடி விசைப்படகுகளுக்கு ரூ 11.75 இலட்சம் மதிப்பீட்டில் சோதனை அடிப்படையிலும், அதனைத்தொடர்ந்து 2,613 படகுகளுக்கு ரூ 6.29 கோடி மதிப்பீட்டிலும் ஆமை விலக்கு சாதனங்கள் (Turtle Excluder Device) வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது இழுவலைகளில் இச்சாதனங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மீனவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் இச்சாதனங்களின் மூலம் மீன்பிடி இழுவலைகளில் கடல் ஆமைகள் சிக்காமல் வெளிச்செல்வதுடன். மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என மீனவர் நலத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b