Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 28 ஜனவரி (ஹி.ச)
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து பாராமதிக்கு சென்ற அம்மாநில துணை முதல்வர் அஜீத் பவாரின் தனி விமானம் இன்று (ஜனவரி 28) காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
தரையில் மோதிய விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில், விமானத்தில் பயணித்த அஜீத் பவார் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அஜீத் பவாரின் மரணம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அஜித் பவார் மறைவை முன்னிட்டு மாநிலத்தில் இன்று தொடங்கி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் பேசியதாவது:
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். மாநிலத்தில் சோகமான சூழல் நிலவுகிறது. அவரைப் போன்ற ஒரு தலைவரை இழந்தது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். பல சவால்களை நாங்கள் ஒன்றாக சந்தித்தோம். மகாராஷ்டிரத்தின் வளர்ச்சிக்கு அவர் பங்களித்து வந்த நேரத்தில், அவரது அகால மரணம் ஒரு பேரிழப்பாகும்.
நாங்கள் அவரது குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம். நானும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் இன்று பாராமதிக்குச் செல்லவுள்ளோம்.இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்தேன், அவர்களும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.
அஜீத் பவார் மறைவையொட்டி, மாநிலம் முழுவதும் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலம் முழுவதும் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
எனக் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / vidya.b