Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜனவரி (ஹி.ச)
தஞ்சாவூரில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை காவல்துறை கைது செய்ததற்கு முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், விவசாயிகள் பெயரில் மோசடியாக வாங்கிய வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஆலை நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் போன்ற தஞ்சாவூர் மாவட்டத்திற்கான தேர்தல் வாக்குறுதி எண் 57 ஐ நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று கும்பகோணம் சென்ற தமிழக முதல்வருக்கு தஞ்சாவூர் மாவட்டம் வேம்பக்குடி சுங்கச்சாவடி அருகே கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளை திமுக அரசு அடக்குமுறையை கையாண்டு கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
டெல்டாகாரன் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிகொண்ட முதல்வர் திரு ஸ்டாலின், விவசாயிகள் பற்றிய அக்கறையோ, சிந்தனையோ இல்லாமல் இருப்பது ஏன்?
நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாமல் இருப்பது, தங்கள் நிலங்களைக் காக்கப் போராடிய திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடுவது என இந்த 60 மாதங்களில் விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்துவரும் திமுக அரசு, ஆட்சி முடியும் தருணத்திலும் அதையே தொடர்கிறது.
தொடர்ந்து ஆயிரம் நாட்களுக்கும் மேலாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடிவரும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்து, இந்தப் பிரச்சினை தொடர்பாக, விவசாயிகள் மீது எந்த வழக்கும் தொடரக் கூடாது என, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b