Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 28 ஜனவரி (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது ஆகும்.
மதுரை பாண்டிய மன்னனின் ஐயத்திற்கு நாராயணனே பரதத்துவம் என விளக்கம் அளித்த பெரியாழ்வார், அதற்கு பாண்டிய மன்னன் அளித்த பொற்கிழியை கொண்டு வடபத்ரசயனர் கோயிலில் ராஜகோபுரம் கட்டினார் என்பதுஇக்கோவிலின் தல வரலாறு ஆகும்.
1 நிலைகள், 11 கலசங்கள் உடன் 196 அடி உயரம் கொண்ட ஶ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தான் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது. வடபத்ரசயனர் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு ராஜகோபுரம், விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கடந்த 2015-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வடபத்ரசயனர் கோயில் ராஜகோபுரத்துக்கு அறநிலையத்துறை சார்பில் ரூ.2.70 கோடி மதிப்பில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் அவதரித்த திருஆடிப்பூர நந்தவனம் உபயதாரர் நிதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் சந்நிதி சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) சந்நிதி விமாலக்ருதி விமானம், ராஜகோபுரம், பெரியாழ்வார், கூரத்தாழ்வார் சந்நிதி உள்ளிட்ட உப சந்நிதிகளின் விமான திருப்பணிகள் உபயதாரர் நிதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கு பாலாலயம் செய்வதற்கான யாகசாலை பூஜைகள் ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கியது. இன்று காலை 9.45 மணிக்கு விமான ராஜகோபுர பாலபிம்ப பிரதிஷ்டை, விஷேச ஆராதனை நடைபெற்றது.
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு பின் 2027- ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கும்பாபிஷேக பணிகளை செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b