Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 28 ஜனவரி (ஹி.ச.)
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் இன்று சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
அஜித் பவாரின் மறைவு தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவ சேனாவின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது,
அஜித் பவார் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். அவரது மறைவு மகாராஷ்டிராவுக்கு ஒரு பேரிழப்பு. மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக நானும் அவரும் ஒரு குழுவாகப் பணியாற்றினோம்.
இப்போது அந்த குழுவின் ஒரு பகுதி இல்லாமல் போய்விட்டது. எனது மூத்த சகோதரரும் என்னைவிட்டு பிரிந்துவிட்டார். இந்த நாள் மகாராஷ்டிராவுக்கு ஒரு கருப்பு நாள். இந்த சம்பவம் அனைவருக்கும் மிகுந்த வேதனையை அளிக்கிறது.
அவர், தெளிவாகவும், சரளமாகவும் பேசக்கூடியவர். திறமையும் கடின உழைப்பும் கொண்டவர். நேர்மை மற்றம் அர்ப்பணிப்புமிக்க தலைவர். பார்க்கலாம்... யோசிக்கலாம்... போன்ற வார்த்தைகள் அவரது அகராதியில் கிடையாது.
அவர் எதற்காகவும் காத்திருக்க மாட்டார். எதைச் செய்ய விரும்பினாலும் அதை உடனடியாகச் செய்வார். தவறான திட்டம் என கருதினால், அதற்கு ‘நோ’ சொல்ல அவர் என்றும் தயங்கியது இல்லை. அதேநேரத்தில், மகளிருக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தை நாங்கள் ஒரு குழுவாக தொடங்கினோம். அதில், அவர் முக்கிய பங்கு வகித்தார்.
நேரத்துக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு மனிதர் அவர். மக்களைச் சந்திக்க காலை 6 மணிக்கே நேரம் ஒதுக்கிய சம்பவங்களும் உண்டு. விடாமுயற்சியுள்ள, துணிச்சலான, ஒழுக்கமான தலைவர் அவர். இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் நிகழாத அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த துயரமான தருணத்தை எதிர்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு தைரியம் கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐவர் உயிரிழப்புக்குக் காரணமான விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b