Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜனவரி (ஹி.ச.)
சென்னை அடுத்த மீனம்பாக்கத்தில் நாட்டு குண்டுகளை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்ட போது திடீரென ஒரு குண்டு வெடித்ததில் தனிப்பிரிவு காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகள், குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்படும் வெடிகுண்டுகள், காலாவதியான நாட்டு வெடி குண்டுகள் ஆகியவற்றை பாதுகாப்பாக அழிப்பதற்கு தமிழக காவல்துறையில் ’மருதம்’ என்ற சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
இந்த ’மருதம்’ சிறப்பு பிரிவானது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், வெடிப் பொருள்களை பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்வது, அழிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை சரக மருதம் பிரிவில் தங்கேஸ்வரன் (வயது 55) என்பவர் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர்.
இந்நிலையில், சென்னை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கும் பணியில் மருதம் பிரிவு போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆய்வாளர் தங்கேஸ்வரன் மற்றும் குழுவினர் மீனம்பாக்கம் காவல் எல்லைக்கு உட்பட்ட பரங்கிமலை அடிவாரத்தில் உள்ள ராணுவ துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் பகுதிக்கு இந்த நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு சென்று அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் அனைத்து வெடிகுண்டுகளும் அழித்து முடிக்கப்பட்ட நிலையில், அதனை ஆய்வாளர் தங்கேஸ்வரன் சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு நாட்டு வெடிகுண்டு எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தங்கேஸ்வரனின் முகம், கை, உடல் பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் இருந்த சக போலீசார் அவரை உடனடியாக மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN