Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஜனவரி (ஹி.ச.)
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் அலுவலகத்தில் அதன் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புவது, கேங் மேன்களை கள உதவியாளர்களாக பதவி உயர்வு அளிப்பது, ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்வது, விடுபட்ட கேங் மேன் பணியாளர்கள் 5000 பேரை பணியில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 3 ஆவது வாரம் தமிழ்நாடு முழுவதும் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
மேலும் பேசிய அவர், சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ளது. தமிழ்நாடு அரசு, மின் ஊழியர்களின் கோரிக்கைகளில் கவனம் செலுத்தவில்லை. முதலமைச்சர் அறிவித்த ஓய்வூதிய திட்டம் மின் ஊழியர்களுக்கும் பொருந்துமா? என தெரியவில்லை. மின்சார வாரியத்தில் 46,000 ஆரம்பப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தினமும் ஒரு ஊழியர் மின்சார வாரியத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கிறார். திமுக தேர்தல் வாக்குறுதி எண் 153-ல் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனக் கூறினர்.
ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. நுகர்வோருக்கு சேவை செய்யும் மின் வாரிய நிறுவனம் லாபம் நஷ்டம் பார்க்காமல் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதை தனியாரிடம் வழங்குவதற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
சிஐடியு சங்கம் நவீன தொழில்நுட்பத்தை வரவேற்கிறது. ஆனால் தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. நிதி சுமை என்று சொல்லி மின்சார வாரியத்தில் களப்பணியில் வேலை செய்யும் பணியாளர்களின் உயிரை அரசு பறிக்கிறது.
மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 3-வது வாரத்தில் பணிப் புறக்கணிப்பு நடத்தலாம் என திட்டமிட்டுள்ளோம். அதற்குள் அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்வு காண வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வாரியம் சார்ந்த தொழிலாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு மின்சார வாரியத்தில் ஆள் பற்றாக்குறையே காரணம் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN