Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 28 ஜனவரி (ஹி.ச.)
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகப்பெருமான் கோவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதை நிறைவேற்றாத தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற உறுதி செய்தது.
ஆனாலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என சுவாமிநாதன் உத்தரவிட்ட தினத்தில் இருந்தே அவர் மீது அவதூறுகளையும், விமர்சனங்களையும் பலர் முன்வைத்து வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகள் சார்பில், நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடமும் மனு தரப்பட்டது.
இதையடுத்து, சுவாமிநாதனுக்கு எதிராக, பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அரசியல் கட்சிகளின் தலைவர்களே, கடுமையான அவதுாறுகளை பரப்பி வந்தனர்.
இப்படி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருபவர்கள், போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று
(ஜனவரி 28) நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பிரசன்னா பாலசந்திர வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பேசியவர்கள், போராட்டம் நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Hindusthan Samachar / vidya.b