Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 28 ஜனவரி (ஹி.ச.)
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பழைய லஞ்ச வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, வீரங்கிநல்லூர் பகுதியைச் சேர்ந்த புகார்தாரர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக லஞ்சம் பெற்றதாக காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அந்த நேரத்தில் சோமரசம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய சாமுவேல் ஞானம் என்பவர், புகார்தாரர்களுக்கு சாதகமாக செயல்பட 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த தொகையை நேரடியாக பெறாமல், சதீஷ் என்பவரை இடைநிலையாளராக பயன்படுத்தி லஞ்சம் பெற்றதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. சாட்சிகள் விசாரணை, ஆவணங்கள் பரிசீலனை உள்ளிட்ட அனைத்து கட்டங்களும் நிறைவடைந்த நிலையில், திருச்சியில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பை அறிவித்தது.
தீர்ப்பில், காவல் ஆய்வாளர் சாமுவேல் ஞானம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத்தை செலுத்த தவறினால், கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த லஞ்சப் பரிவர்த்தனையில் புரோக்கராக செயல்பட்ட சதீஷ் என்பவருக்கும் நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை, அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை எச்சரிக்கும் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த வழக்கில் தண்டனை பெற்ற சாமுவேல் ஞானம் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, காவல் துறையிலும் பொதுமக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.
இதன் மூலம், சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என்பதும், காலம் கடந்தாலும் நீதியினால் தண்டனை வழங்கப்படும் என்பதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN