சில்லறை பிரச்னைக்கு தீர்வு காண வரும் ஹைப்ரிட் ஏடிஎம்..!
சென்னை, 29 ஜனவரி (ஹி.ச.) அன்றாடம் மக்கள் சந்திக்கும் சில்லறை பிரச்னைக்கு தீர்வு காண, பிரத்யேக ஏடிஎம்-ஐ கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ஏடிஎம்களில் 100, 200, 500 ரூபாய் தாள்கள் மட்டுமே கிடைக்கப் பெறுவதால், அவற்றை சில்லறைகளாக மாற்ற
சில்லறை பிரச்னைக்கு தீர்வு காண வரப்போகுது ஹைப்ரிட் ஏடிஎம்..!


சென்னை, 29 ஜனவரி (ஹி.ச.)

அன்றாடம் மக்கள் சந்திக்கும் சில்லறை பிரச்னைக்கு தீர்வு காண, பிரத்யேக ஏடிஎம்-ஐ கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது ஏடிஎம்களில் 100, 200, 500 ரூபாய் தாள்கள் மட்டுமே கிடைக்கப் பெறுவதால், அவற்றை சில்லறைகளாக மாற்ற முடியாமல் சாமானிய மக்கள் திண்டாடுகின்றனர்.

இந்த அவதியை போக்கும் விதமாக, சில்லறை நோட்டுகளை வழங்கும் ஹைப்ரிட் ஏடிஎம்-ஐ களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, 500 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் கருவிக்குள் செலுத்தி, நமக்கு தேவையான 10, 20, 50 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

முன்னோட்டமாக, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்த ஹைப்ரிட் ஏடிஎம், பரிசோதனை முயற்சியாக உபயோகப்படுத்தப்படுகிறது. பணம் வழங்கும் ஏடிஎம்-களிலேயே சில்லறை மாற்றும் ஒருங்கிணைந்த வசதியை புகுத்தும் வேலையும் மும்முரமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கேற்ப, 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் அச்சடிக்க ஆர்பிஐ திட்டமிட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.

மும்பையில் இந்த சோதனை வெற்றி பெற்றால், நாடு முழுவதும் இந்த கலப்பின ஏடிஎம் பயன்பாட்டுக்கு வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM