Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜனவரி (ஹி.ச.)
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளித் தூதுவர் திட்டம் தொடக்க நிகழ்வு இன்று (ஜனவரி 30) நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலாளர், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், அரசு பள்ளியின் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், இஸ்ரோ தலைவர் வி நாராயணன், மயில்சாமி அண்ணாதுரை, எழுத்தாளர் இமயம், வழக்கறிஞர் அருள்மொழி, கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களை விழுதுகள் என்ற செயலி மூலம் இணைத்து அரசு பள்ளியின் மேம்பாட்டுக்காக ஒருங்கிணைக்கும் திட்டம்தான் அரசுப் பள்ளி தூதுவர் திட்டம்.
சாதனை படைத்த முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த பள்ளியின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டு பள்ளிக்கு தேவையான நன்கொடை வசூலிப்பது, உள் கட்டமைப்பை மேம்படுத்துவது, பல நிகழ்ச்சிகளை முன்னெடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களிடமிருந்து பள்ளி வளர்ச்சிக்காக நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் தொடங்கப்பட்டு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பள்ளிகளுக்கான வளர்ச்சி நிதியை பெற்றுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்களின் வாயிலாக 1.15 மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
கேரியர் கைடன்ஸ் மூலம் முன்னாள் மாணவர்கள் 50,000 பேர் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டு முதல் விழுதுகள் என்னும் திட்டத்தின் மூலம் முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அரசு பள்ளிகளில் தங்கள் பள்ளிகளுக்காக செயல்பட தயாராக இருப்பவர்களை அப்பள்ளிகளின் தூதுவராக நியமிக்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை அரசு பள்ளிகளின் தூதுவர்களாக 20,160 முன்னாள் மாணவர்கள் நியமிக்க ட்டுள்ளனர். இன்று நடைபெற்ற நிகழ்வில் 40 பள்ளிகளைச் சார்ந்த முன்னாள் மாணவர்கள் தூதுவர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது,
நான் அரசுப்பள்ளி மாணவன். மிக சிறிய இடம்தான் அந்த பள்ளி. மரத்தடியில் அமர்ந்து பாடிப்போம். இன்று இந்திய விண்வெளி செயலாளராக உங்கள் முன் நிற்கிறேன். வாழ்க்கையில் முன்னேற இருவர் தான் காரணம் ஒன்று பெற்றோர், மற்றொருவர் ஆசிரியர்.
என் வாழ்வில் அடித்தளத்தை உறுதியாக அமைத்தது நான் படித்த அரசுப் பள்ளி. அது வெறும் கட்டிடம் அல்ல சமத்துவத்தின் இடம். எங்களுக்கு பாடம் மட்டும் அல்ல ஒழுக்கம் ஒற்றுமை என அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். ஆசிரியர்கள் பாடம் சொல்லிதருபவர்கள் மட்டும் அல்ல சிற்பிகள். அரசு பள்ளி எனக்கு படிக்க கற்றுத்தந்தார்கள். ஆசிரியர்கள் எனக்கு வாழ கற்றுகொடுத்தார்கள்.
நான் இன்று இருக்கும் நிலைக்கு என் ஆசிரியர்கள்தான் காரணம். இந்த நேரத்தில் என் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நம் பயணம் தொடங்கிய இடம் தான் பள்ளிக்கூடம். நன்றி சொல்வதற்காகவே நாம் அங்கு வரவேண்டும்.
அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்ச்சியில் பேசியதாவது,
அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம் என்று சட்டப்பேரவையில் குறிப்பிட்டேன். இந்த பள்ளியில் இந்த நிகழ்வை தொடங்கியது எனக்கு பெருமை. காலை உணவு திட்டத்தை தொடங்கியதற்கு காரணமும் இந்த பள்ளிதான்.
இந்த பள்ளிக்கு முதலமைச்சர் வந்த பொழுதுதான் மாணவியிடம் காலையில் சாப்பிட்டீங்களா என்று கேட்டார்... அம்மா வேலைக்கு செல்வதால் சாப்பிடவில்லை என்றார்கள். அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேரடியாக கோட்டைக்கு சென்று அதிகாரிகளிடம் ஆலோசித்துவிட்டு காலை உணவு திட்டத்தை அறிவித்தார்.
இனி வரும் காலத்தில் தூதுவர்கள் அங்கே சென்று பேசும் போது மாணவர்கள் ஊக்கப்படுத்தும் பணியை செய்ய நாங்களும் காத்துக்கொண்டு இருக்கிறோம்.
முன்னாள் மாணவர்களை விழுதுகள் செயலி மூலம் ஒருங்கிணைத்துள்ளோம். ஒரே ஒரு மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் நாராயணன், ஜெயரஞ்சன் போதாது,
பல மயில்சாமி அண்ணாதுரை, நாராயணன் வர வேண்டும். நீங்கள் பள்ளியில் அடி எடுத்து வைத்தால் அது சாத்தியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b