Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 30 ஜனவரி (ஹி.ச.)
தி.மு.க. அடையப்போகும் வரலாற்று வெற்றிக்கு பெண்கள் மகுடம் சூட்டுவார்கள் என அமைச்சர் கே.என்.நேரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், அவர் தெரிவித்துள்ளதாவது;
சட்டமன்றத் தேர்தல் குறித்து நிகழ்த்தப்படும் ஒவ்வொரு ஆய்வும், கருத்துக் கணிப்புகளும் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் நிறுவ மக்கள் உறுதியெடுத்துவிட்டதை காட்டுகின்றன.
நேற்று டெக்கான் க்ரானிகல் பத்திரிகை எழுதியிருந்த ஆய்வு கட்டுரையும், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பும் அதனை மெய்பிக்கின்றன.
’பெண்களின் இதயங்களை வெல்லும் போட்டியில், திமுக முன்னணியில் உள்ளது’
(In race to win hearts of women, DMK is ahead a) என தலைப்பிட்டு டெக்கான் க்ரானிகல் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில், சிறுபான்மையினர் மத்தியில் அதிமுகவின் அங்கீகாரம் சரிந்துள்ளது என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 70 முதல் 80 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்று கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என்று சமூகவியலாளர்கள் கருதுகின்றனர் என தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியா டுடே பத்திரிகையும் சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்தியா கூட்டணி 45 சதவிகித ஆதரவோடு முன்னிலையில் இருக்கிறது என இந்தியா டுடே - சி வோட்டர்ஸ் தெரிவித்திருக்கிறது. அதிமுக இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 33 சதவிகித ஆதரவுதான் இருக்கிறது. வித்தியாசம் 12% என்பதால் தொட முடியாத உயரத்தில் திமுக கூட்டணியை மக்கள் உயர்த்திப்பிடிக்கின்றனர்.
மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி தொடர்ச்சியாக எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெறும் கூட்டணியாக திமுக அணி இருக்கிறது. 2026 தேர்தலிலும் திமுக வெல்லும். அதனை கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்கின்றன.
தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெண்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று அசைக்க முடியாத அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு! திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைக்க தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்! தமிழ்நாட்டில் இருக்கும் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்று 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றியில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கும்.
தமிழ்நாட்டுப் பெண்களின் உரிமைகளுக்காக அவர்களின் சமூக மேம்பாட்டிற்காக திராவிட மாடல் அரசு அக்கறையோடு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் ஏறக்குறைய 1.30 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர். அரசு நகர பேருந்துகளில் அனைத்துப் பெண்களுக்கும் ‘விடியல் பயணம்’ மூலம் உத்வேகத்தையும் பொருளாதார சேமிப்பையும் உறுதிப்படுத்தியிருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர்.
இதுவரை 800 கோடி பயணங்களுக்கும் மேல் பெண்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதே இத்திட்டத்தை தமிழ்நாட்டுப் பெண்கள் எவ்வளவு தூரம் வரவேற்றிருக்கிறார்கள் என்பதற்குச் சான்று.
பெண்களின் முன்னேற்றத்திற்கான தடைகள் எங்கிருந்தாலும் அதை ஒழித்து, அவர்களது முன்னேற்றப்பாதையைச் செழுமைப்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்களைத் திராவிட மாடல் அரசு தீட்டியிருக்கிறது. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இத்திட்டம் மூலம் இதுவரை 6.95 இலட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.
பெண்களின் திறன்களும் உழைப்பாற்றலும் படைப்பாற்றலும் கிராமங்களில் முடங்கிவிடக் கூடாது அவர்கள் நகரங்களுக்கு வந்து, தங்களையும் உயர்த்தி தமிழ்நாட்டையும் உயர்த்த வேண்டும் எனும் நோக்கத்தோடு அதீத பாதுகாப்போடு உயர்தர தோழி விடுதிகளை அமைத்திருக்கிறது.
பணிக்குச் செல்லும் குடும்பப் பெண்கள் பள்ளிக்குச் செல்லும் தங்கள் குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்துள்ள காலை உணவு கிடைக்காமல் போய்விடுகிறேதே என்றிருந்த கவலையைத் தீர்த்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சுவையான சத்தான காலை உணவுத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இத்திட்டத்தின் மூலம் 20 இலட்சம் மாணவர்கள் தினமும் பயன் பெறுகின்றனர்.
இன்றைக்கு பெண்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்குப் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயதுடைய , சுமார் 3.39 இலட்சம் சிறுமிகளுக்கு விலையில்லா தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பெண்களின் வாழ்வாதாரத்தில் மட்டுமல்ல அவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டு கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறது திமுக அரசு.
பெண்களை ஆதிக்கம் செய்ய நினைப்பவர்கள், துன்புறுத்த நினைப்பவர்களை கடுமையாக தண்டிக்கத் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு (திருத்தச்) சட்டத்தை கொண்டு வந்தவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்தான்.
பெண்களை முன்னேற்று திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இது போன்றத் திட்டங்கள் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்திவரும் மறுமலர்ச்சியை கண்டு வயிற்றெரிச்சலில் திரிபவர்கள், உண்மைகளை ஜீரணிக்க முடியாமல், அவதூறுகளை நாள்தோறும் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிருக்கிறார்கள்.
இதனையெல்லாம் தமிழ்நாட்டுப் பெண்கள் பொருட்படுத்துவதில்லை. தங்களுக்காக உழைக்கின்ற, தங்களுக்காக திட்டங்களை உள்ளன்போடு, உயர்த்தும் நோக்கத்தோடு செயல்படுத்தும் திராவிட மாடல் அரசே தொடர வேண்டும் எனும் தமிழ்நாட்டின் பெரும்பான்மை பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்.
45% என்பதே கூட மிகக் குறைவான கணக்குதான் என்பதை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும். அதற்கு திமுக ஆட்சியில் பயன்பெறும் பெண்கள்தான் மகுடம் சூட்டுவார்கள்!
இவ்வாறு அவர் அந்த அருகில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam