சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு தொடர்பான வழக்குகளில் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உதவ சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்
திருவனந்தபுரம்‌‌‌, 30 ஜனவரி (ஹி.ச.) சபரிமலை ஐயப்பன் ஆலயத்தின் பொற்கவச மோசடி தொடர்பான இரு வழக்குகளில் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் துணைபுரியும் விதமாக, என்.கே.உண்ணிகிருஷ்ணன் அவர்களை சிறப்பு அரசு வழக்கறிஞராக கேரள அரசு நியமித்துள்ளது. கடந்த 20
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு தொடர்பான வழக்குகளில் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உதவ சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்


திருவனந்தபுரம்‌‌‌, 30 ஜனவரி (ஹி.ச.)

சபரிமலை ஐயப்பன் ஆலயத்தின் பொற்கவச மோசடி தொடர்பான இரு வழக்குகளில் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் துணைபுரியும் விதமாக, என்.கே.உண்ணிகிருஷ்ணன் அவர்களை சிறப்பு அரசு வழக்கறிஞராக கேரள அரசு நியமித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறை கதவுகள் மற்றும் துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பின்னர், அவற்றின் எடை குறைந்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

இதனை அடுத்து, தங்க கவச புதுப்பிப்புப் பணிக்கான முழு செலவையும் ஏற்ற பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முந்தைய தலைவர்களாக இருந்த ஏ.பத்மகுமார், என்.வாசு உட்பட 12 நபர்களை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விசாரணையின்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு சட்டரீதியான ஆலோசனைகள் வழங்கவும், குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் அதை முழுமையாக ஆராயவும் சிறப்பு அரசு வழக்கறிஞராக என்.கே. உண்ணிகிருஷ்ணனை மாநில அரசு நியமித்துள்ளதாக அதிகாரிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

திருச்சூரைச் சேர்ந்த வழக்கறிஞர் உண்ணிகிருஷ்ணன், இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டு ஏப்ரலில் குரும்பாடியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக திறம்பட பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வழக்கில் குற்றவாளியான அமீருல் இஸ்லாத்துக்கு மரண தண்டனை பெற்றுத்தர தனது திறமையான வாதத்தின் மூலம் வழிவகை செய்தார். மேலும் கோழிக்கோடு கூடதாயைச் சேர்ந்த ஜாலிக்கு எதிரான தொடர்ச்சியான கொலை வழக்கிலும் இவர் சிறப்பு அரசு வழக்கறிஞராக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

இதற்கிடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் நிர்வாக அதிகாரி எஸ். ஸ்ரீகுமாருக்கு கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி நேற்று தீர்ப்பு அளித்தது.

அதன் தொடர்ச்சியாக, அவர் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த இரண்டாவது நபர் இவராவார்.

இந்த வழக்கில் கைதான தேவசம் போர்டின் முன்னாள் நிர்வாக அதிகாரி பி. முராரி பாபுவுக்கு கொல்லம் நீதிமன்றம் முன்னதாகவே ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து அவர் சிறையிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கோடு தொடர்புடைய பெங்களூரு தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றிக்கும் நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது.

இருப்பினும், துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் புதுப்பிக்கப்பட்டது தொடர்பான வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

Hindusthan Samachar / JANAKI RAM