Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 ஜனவரி (ஹி.ச.)
கோவை கொடிசியா வளாகத்தில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம் ஒன்று 24 மணி நேரத்தில் அழகிய நவீன வடிவமைப்புடனான கட்டிடம் ஒன்றை அமைக்கும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது.
அதன்படி அந்நிறுவ ஊழியர்கள் சுமார் ஆயிரம் சதுரடி பரப்பளவில் நவீன வடிவமைப்பில் முற்றிலும் உலோகங்கள் மற்றும் மர பலகைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு அழகான அலுவலக கட்டிடம் ஒன்றை சுமார் 11 மணி நேரத்திற்குள் வடிவமைத்து சாதனை படைத்தனர்.
மேலும் இந்த புதிய வகையிலான உடனடி கட்டிடத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பெயர்த்து வைக்க இயலும் என்றும் இயற்கை சீற்றங்களை தாங்கக்கூடிய வகையில் முழு பாதுகாப்புடன் வடிவமைத்திருப்பதாகவும் அந்நிறுவன நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டுகளாக கட்டிட வடிவமைப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் அண்மையில் இந்த உடனடி கட்டிட அமைப்பை ஒரு சில இடங்களில் உருவாக்கி வெற்றி கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு இடங்களுக்கு தகுந்தபடியும் உபயோகத்திற்கு தகுந்தபடியும் இந்த கட்டிடத்தை வடிவமைக்க முடியும் என்றும் சாதாரண கட்டிடத்தில் என்னென்ன பயன்பாடுகள் உள்ளனவோ அத்தனை பயன்பாடுகளையும் இந்த கட்டிடத்திலும் செயல்படுத்த முடியும் என்றும் மின்சாரம் தண்ணீர் பயன்பாடு ஆகியவை முழுமையாக பயன்படுத்தலாம் என்றும் சாதாரண கட்டிடங்களை வடிவமைப்பதை விட சுமார் 40% செலவுகளை இந்த உடனடி கட்டிடம் மூலம் மிச்சப்படுத்தலாம் என்றும் இனி வரும் காலகட்டத்தில் இது போன்ற கட்டிடங்களின் பயன்பாடு மற்றும் தேவை அதிகம் இருக்கும் என்பதால் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து அந்த நிறுவனத்தின் சாதனை முயற்சியை அங்கீகரித்த பிஎன்ஐ உலக சாதனை நிறுவனம் 11 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட நவீன கட்டிடத்தை அங்கீகரித்து உலக சாதனைக்கான சான்று வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J