Enter your Email Address to subscribe to our newsletters

இடுக்கி, 31 ஜனவரி (ஹி.ச.)
கேரள அரசின் 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கட்டப்பனை (இடுக்கி) - கம்பம் (தேனி) குகைப்பாதை திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரள தேசத்தின், இடுக்கி வட்டத்தின் நீண்ட நாள் கனவுத் திட்டமான கட்டப்பனை - கம்பம் குகைப்பாதை திட்டத்தின் செயல்முறைகள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஆரம்பகட்டமாக கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த திட்டத்துக்கான மொத்த திட்ட மதிப்பு ரூ. 1,182.43 கோடி ஆகும்.
அபாயகரமான வளைவுச் சாலைகளில் கம்பத்திலிருந்து கட்டப்பனைக்குச் செல்ல 40 கி.மீ. தூரம் பயணம் செய்ய ஏறத்தாழ 90 நிமிடங்கள் ஆகும். ஆனால், இந்த மலைகளுக்கு நடுவே உருவாக்கும் குகைப்பாதையால் 12 முதல் 15 கி.மீ. தூரமாகக் குறைந்து, 30 நிமிடங்களில் போய்விடலாம்.
இதன் வழியே எரிபொருள், பயண நேரம் மிச்சமாகி சுற்றுச்சூழல் பிரச்சினையும் குறையும். மேலும், கேரளாவின் இடுக்கி வட்டத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு அவசர மருத்துவ உதவிக்கு போவோருக்கும் மிகவும் உபயோககரமாக இருக்கும்.
அது மட்டுமின்றி, இரண்டு மாநிலங்களுக்கிடையில் வியாபாரம், சுற்றுலாத் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த திட்டத்தில் 500 முதல் 900 மீ. உயர்வு உள்ள மலையைத் துளைத்து குகைப்பாதை உருவாக்க வாய்ப்பிருக்கிறது. இதற்காக, தமிழ்நாடு - கேரளாவைச் சாா்ந்த வனத்துறையினர், மத்திய - மாநில அரசுகள், பொறியாளர் வல்லுநர்கள் கொண்டு ஆராய்ச்சி செய்யப்படும்.
மலையைத் தோண்டி உருவாக்கும் இந்த வேலையால் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணைகள், காட்டு விலங்குகள், இயற்கை, சுற்றுச்சூழல் முதலியவைகளுக்கு ஏதாவது இடையூறுகள் ஏற்படுமா என்ற கண்ணோட்டத்தில் ஆரம்பகட்டமாக ஆய்வுப் பணிகள் நடக்கவுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM