தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்தில் பலி
மதுரை, 31 ஜனவரி (ஹி.ச) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது தனியார் பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் வி
Accident


மதுரை, 31 ஜனவரி (ஹி.ச)

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது தனியார் பேருந்து மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கம் மற்றும் மாதேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வழக்கம்போல இருசக்கர வாகனத்தில் பயணித்து வந்த நிலையில், அதே வழியாக அதிவேகமாக வந்த தனியார் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. மோதலின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தலை சிதறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நிகழ்ந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கும், ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, பேருந்தை அப்புறப்படுத்தினர். விபத்துக்குக் காரணமான தனியார் பேருந்தின் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

திடீரென நடந்த இந்த விபத்தில் இளம் வயதில் இருவர் உயிரிழந்தது, அவர்களது குடும்பத்தினரையும், உறவினர்களையும் கடும் அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த துக்கத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.

சம்பவ இடத்தில் கூடியிருந்த பொதுமக்கள், இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதாகவும், அதிவேகமாக செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN