Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 31 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாட்டின் ஆன்மீக வரலாற்றில் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது வாக்கு. ஆனால், குன்றுகள் இல்லாத சமவெளிப் பகுதிகளிலும், தமிழ்க் கடவுள் முருகன் பல நூற்றாண்டுகளாக நிலை பெற்று, அருள்பாலித்து வருகிறார் என்பதற்குச் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒரு சிறந்த சான்றாக உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் சிவகங்கை தொல்நடைக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வு, மானாமதுரையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் கோயில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன. மானாமதுரை வைகை ஆற்றில் மணல் எடுக்கும் போது ஒரு கல் தூண் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் அதை மீட்டுக் கரையில் சேர்த்தனர். தொல்லியல் அறிஞர் வேதாச்சலத்தால் படிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு, போதிய பராமரிப்பின்றி ஆற்றங்கரையிலேயே பல ஆண்டுகள் கிடந்தது.
பின்னர், சிவகங்கை தொல்நடைக் குழுவின் முயற்சியால் 2025-ல் சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டு, தற்போது பாதுகாக்கப்படுகிறது. ஒரே கல்லில் இரண்டு பேரரசுகள் என்பது இந்தக் கல்வெட்டின் மிக முக்கியமான சிறப்பு, இதில் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் ஆட்சி கால செய்திகள் ஒரே தூணில் செதுக்கப்பட்டிருப்பது தான்.
தூணின் ஒரு பக்கத்தில், மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் (கி.பி. 999), சேந்தன் செங்கோடன் என்பவரின் மனைவி பூதனம்பியம்மை, இங்கிருந்த முருகன் கோயிலுக்குத் தினமும் நெய் விளக்கேற்ற 'சாவா மூவாப் பேராடு' எனப்படும் 25 ஆடுகளைத் தானமாக வழங்கிய செய்தி உள்ளது.
மற்றொரு பக்கத்தில், ஸ்ரீ வல்லப பாண்டியனின் ஆட்சியில் (கி.பி. 1019), கருங்குடி நாட்டு சுந்தரபாண்டியன் கோன் என்பவர் அதே கோயிலுக்கு நெய் விளக்கு வழங்கிய செய்தி இடம்பெற்றுள்ளது.
10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுகளில் இந்த பகுதி சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் ஆளுமைக்கு உட்பட்டு, முருகன் வழிபாடு செழித்தோங்கியதை இது காட்டுகிறது. இந்தக் கல்வெட்டின் படி, இன்று 'குலாலர் தெரு' என்று அழைக்கப்படும் பகுதி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'திருக்குமரமங்கலம்' என்ற அழகான பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் பெயரிலேயே (குமரன்) இந்த ஊர் விளங்கியது அதன் தொன்மையை உணர்த்துகிறது.
தேடலில் கிடைத்த போர் முருகன் தற்போதுள்ள சுப்பிரமணியர் கோயில் நவீனக் கட்டுமானத்தைக் கொண்டுள்ளதால், கல்வெட்டு குறிப்பிடும் அந்தப் பழைய கோயில் எது என்ற கேள்வி எழுந்தது. இதற்கான விடை அருகில் உள்ள மாயாண்டி சுவாமிகள் மடத்தில் கிடைத்தது. அங்கு ஆய்வு செய்த போது, 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழமையான முருகன் சிலை கண்டறியப்பட்டது.
நான்கு கரங்களுடன், கிரீடம் சூடி, போர்க் கடவுளாக 'வஜ்ராயுதம்' ஏந்தி நிற்கும் இந்த முருகன் சிலை, பல அணிகலன்களுடன் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையே அந்தப் பழமையான கோயிலின் எச்சமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆற்று மணலில் புதைந்திருந்த ஒரு கல் தூண், மானாமதுரையின் ஆயிரம் ஆண்டுப் பழமையான ஆன்மீக முகவரியை இன்று மீட்டெடுத்துள்ளது. சிவகங்கை தொல்நடைக் குழுவின் இந்த ஆய்வு, நமது மண்ணின் மறைக்கப்பட்ட வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கிய
முயற்சியாகும்.
Hindusthan Samachar / ANANDHAN