Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஜனவரி (ஹி.ச.)
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதுமையான ஆதார் மொபைல் செயலியை களமிறக்கியுள்ளது. இது டிஜிட்டல் உலகில் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்.
இந்த புதிய செயலி, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஆதார் செயலியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு மேம்பட்ட அம்சங்களுடன் வந்துள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கையில் கொடுப்பதுடன், சரிபார்ப்பு மற்றும் அங்கீகார நடைமுறைகளை காற்றை போல எளிதாக்குகிறது. அதுமட்டுமல்லாமல், முகவரி மாற்றம் செய்வது போன்ற அடிக்கடி தேவைப்படும் சேவைகளை சுலபமாக்குவதே இதன் பிரதான நோக்கம்.
புதிய ஆதார் செயலியின் அதிரடியான சிறப்பம்சம் என்னவென்றால், முழு ஆதார் அட்டையையும் காட்டாமல், தேவையான தகவல்களை மட்டும் கத்தரித்து கொடுக்கும் வசதிதான். இது பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கு ஒரு அரணாக இருக்கும்.
உதாரணமாக, ஹோட்டல்களில் ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்துவதை இது தடுக்கும். இனிமேல், உங்கள் தகவல்களை முழுமையாக காட்டாமல், பெயர் மற்றும் வயது போன்ற அத்தியாவசிய விவரங்களை மட்டும் தேவைக்கு ஏற்ப பகிர்ந்து கொள்ளலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பயனர்கள் இனி தங்கள் ஆதார் எண்ணுடன் இணைந்த மொபைல் எண்ணை இந்த செயலி மூலமாகவே புதுப்பிக்கலாம். அதாவது, மொபைல் எண்ணை மாற்றுவதற்கு இனி ஆதார் சேவை மையத்துக்கு அலைய வேண்டியதில்லை.
இதே போல், பயனர்கள் தங்கள் முகவரி விவரங்களையும் செயலி மூலம் புதுப்பிக்கலாம். இதனால் முகவரி மாற்றங்களுக்காக ஆதார் மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை நீக்கப்படுகிறது.
புதிய செயலி ஆஃப்லைனிலும் ஆதார் சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது. இணைய இணைப்பு இல்லாமலேயே, மக்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இணைய வசதி குறைவாக உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
மேலும், இந்த புதிய ஆதார் செயலி குடும்ப மேலாண்மை அம்சத்துடன் வந்துள்ளது. ஒரு டிவைஸில் ஐந்து ஆதார் புரொஃபைல்களை நிர்வகிக்கலாம். இதன் மூலம், ஒரு மொபைல் போனில் இருந்து ஒரு குடும்பத்திற்கான ஆதார் விவரங்களை நிர்வகிக்கலாம்.
புதிய ஆதார் செயலியை டவுன்லோட் செய்வது எப்படி?
புதிய ஆதார் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோர் இரண்டிலும் கிடைக்கிறது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த, இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்:
— கூகிள் பிளே ஸ்டோர் (ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரைத் திறக்கவும் (iOS பயனர்களுக்கு).
— UIDAI-இன் அதிகாரப்பூர்வமான “ஆதார்” செயலியை சர்ச் செய்யவும்.
— அந்தச் செயலியை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கம் செய்து நிறுவவும் (இஸ்டால் செய்யவும்).
— உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து, செட்-அப் -ஐப் பூர்த்தி செய்யுங்கள்.
— இன்ஸ்டலேஷன் முடிந்ததும், டிஜிட்டல் அடையாள மேலாண்மை, சரிபார்ப்பு, மாற்றங்கள் அல்லது புதுப்பிப்புகளைச் செய்தல் மற்றும் பிற பணிகளுக்காக நீங்கள் அந்தச் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
Hindusthan Samachar / JANAKI RAM