Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 31 ஜனவரி (ஹி.ச.)
கடந்த ஜனவரி 28 அன்று பாராமதியில் நடந்த விமான விபத்தில் மஹாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழந்தார்.
இந்த நிலையில் மறைந்த அஜித்பவார் மனைவியும், ராஜ்யசபா உறுப்பினரான சுனேத்ரா பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின்(என்சிபி) சட்டமன்றக் கட்சித் தலைவராக இன்று ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை விதான் பவனில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், மூத்த தலைவர் திலீப் வால்சே பாட்டீல் இவரது பெயரை முன்மொழிய, சகன் புஜ்பால் அதனை வழிமொழிந்தார்.
அஜித் பவார் மறைவுக்கு பிறகு கட்சியில் ஏற்பட்டுள்ள அரசியல் இடைவெளியை நிரப்பவும், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜ., மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) உள்ளிட்ட மஹாயுதி கூட்டணி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சுனேத்ரா பவார், கட்சி தலைவராக தேர்வானதை தொடர்ந்து,மஹாராஷ்டிராவின் துணை முதல்வராக இன்று (ஜனவரி 31) மாலை 5 மணியளவில் அவர் பதவியேற்க உள்ளார்.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அவர், துணை முதல்வர் பதவியில் நீடிக்க அடுத்த 6 மாதங்களுக்குள் மஹாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ அல்லது எம்எல்சி) தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக அவர் தனது தற்போதைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b