Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 7 ஜனவரி (ஹி.ச.)
செல்போன்கள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தற்போது அனைவரது கைகளிலும் ஆறாம் விரலைப் போல செல்போன்கள் உள்ளன.
அதிலும் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு மக்களின் பிரதான பொழுதுபோக்கு அம்சமாக செல்போன்களே மாறிவிட்டன. இன்றைய ஜென்சி தலைமுறையினர் பலர் டிவி பார்க்காமல் இருந்து விடுவார்கள். செல்போன் இன்றி இருக்க மாட்டார்கள்.
அந்த அளவுக்கு செல்போன்கள் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. எனினும் இணைய வசதிதான் இதற்கு ஆக்சிஜன் போல உள்ளது. இணைய வசதி இல்லையென்றால் யூடியூபில் வீடியோ, லைவ் தொலைக்காட்சிகளை பார்க்க முடியாது.
ஆனால், இதனை மாற்றும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘டைரக்ட் டு மொபைல்’ என்ற புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சியில் தொலைத்தொடர்புத் துறை ஈடுபட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் லைவ் டிவி நிகழ்ச்சிகளை மொபைலில் பார்வையாளர்கள் இணைய வசதி இல்லாமலேயே கண்டுகளிக்க முடியும். தற்சமயம் சோதனை முயற்சியில் இருக்கும் இந்த டெக்னாலஜியை கூடிய விரைவில் இந்தியாவில் 19 நகரங்களில் பெரும் அளவில் அறிமுகப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதெப்படி இணையம் இல்லாமல் இயங்கும் என கேள்வி எழலாம். செயற்கைக்கோள் மூலம் நேரடியாக செல்போனுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப அடிப்படையில் இது இயங்கும்.
இதற்காக பிரத்யேக சிப் பொருத்தப்பட்ட செல்போன்களை தயாரிக்கும் பணியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ரேடியோ ஸ்டேஷனில் இருந்து வரும் சிக்னலை ரிசீவர் பிடித்து எப்படி ஒலிபரப்பு செய்கிறதோ, அதே மாதிரி டிவி சேனல்களின் சிக்னலை இந்த சிப் பிடித்து வீடியோவை ஒளிபரப்பும்.
அதன்படி, பெங்களூருவில் உள்ள ‘சான்கியா லேப்ஸ்’ என்ற நிறுவனம் இந்த சிப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. முதல் கட்டமாக சில முக்கிய நகரங்களில் பிரசார் பாரதி சேனல்கள் சேவையை வழங்க உள்ளன. அதன் பிறகு மற்ற சேனல்களும் சேர்க்கப்படலாம். பின்னர் அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து படிப்படியாக நாடு முழுவதும் இந்த சேவை விரிவுபடுத்தப்படக்கூடும்.
பேரிடர் காலங்களிலும் செல்போன் சிக்னல் இல்லாத பகுதிகளுக்கும் இது பெரும் பயனளிக்கும் என்று தெரிகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM