சபரிமலையில் 16 ஆயிரம் பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்ட தொகை ரூ.16 லட்சம் மோசடி - குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
சபரிமலை, 7 ஜனவரி (ஹி.ச.) சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2019-ம் ஆண்டு முதல் நடந்த தங்க அபகரிப்பு தொடர்பாக கேரள ஐகோர்ட்டின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அடங்குவதற்குள
சபரிமலையில் 16 ஆயிரம் பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்ட தொகை ரூ.16 லட்சம் மோசடி - குற்றப்பிரிவு போலீசார் விசாரணை


சபரிமலை, 7 ஜனவரி (ஹி.ச.)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2019-ம் ஆண்டு முதல் நடந்த தங்க அபகரிப்பு தொடர்பாக கேரள ஐகோர்ட்டின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது நடப்பு சீசனில் சபரிமலையில் நெய்விற்பனை செய்ததில் ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு:-

சபரிமலையில் நடத்தப்படும் பிரதான வழிபாடுகளில் ஒன்று நெய்யபிஷேகம். பக்தர்கள் நடத்தும் நெய்யபிஷேகத்தின் போது சேகரிக்கும் நெய்யில் சிறிய அளவு அபிஷேகம் நடத்தும் பக்தர்களுக்கு வழங்கப்படும். மீதம் நெய் 100 கிராம் வீதம் பாக்கெட்டுகளில் அடைத்து ரூ.100 வீதம் கவுண்ட்டர்களில் விற்பனை செய்யப்படும்.

அவ்வாறு 16 ஆயிரம் பாக்கெட் நெய் விற்பனை செய்யப்பட்ட தொகை ரூ.16 லட்சம் இதுவரை தேவஸ்தான கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி குறித்து தேவஸ்தான குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கடந்த சீசனில் சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிமுகம் செய்த ஐயப்பன் உருவம் பதித்த நாணயங்கள் சபரிமலையில் திருடப்பட்ட தங்கத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு சன்னிதானத்திலேயே விற்பனை நடத்தி இருப்பது சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM