Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 07 ஜனவரி (ஹி.ச.)
2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரொக்கத்தொகை ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம் மட்டும்) அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 957 நியாயவிலைக் கடைகளில் மொத்தம் 5,41,007 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த மொத்த குடும்ப அட்டைகளில் கூட்டுறவு, மகளிர் சுய உதவிக் குழு, தமிழ்நாடு வாணிக கழகக் கடைகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் இதன் மூலம் பயன்பெறுவர் எனவும், மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் நியாய விலைக் கடைக்குச் சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் எனவும், வரும் 08.01.2026ஆம் தேதி முதல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் குறித்த புகார்கள்/ குறைகள் ஏதுமிருப்பின் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் 0461-2341471-ல் புகார் அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b