Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.)
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை விமர்சித்து கீழைக்காற்று பதிப்பகம் புத்தகம் ஒன்றை சென்னை 49-வது புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.இந்த புத்தகத்துக்கு தடை விதிக்கக்கோரி ஜெகன்னாத் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டு இருந்தார்.
இந்த வழக்கு இன்று
(ஜனவரி 07) காலை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் பிற்பகல் 2:15 மணிக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டு இருந்தார்.
இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சித்து வெளியாக உள்ள புத்தகத்தை பறிமுதல் செய்ய வேண்டும். பொறுப்பில் உள்ள நீதிபதியை எப்படி விமர்சிக்க முடியும். எந்த வகையிலும் புத்தகம் வெளிவராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புத்தகத்தில் அவதூறு வார்த்தைகள் மட்டும் அல்ல கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. அறிவுசார் தளமான புத்தக கண்காட்சியில் இதுபோன்ற செயல்களுக்கு ஒரு போதும் அனுமதி தர முடியாது, என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில் குறிப்பிட்ட புத்தகம் நாளை விற்பனைக்கு வெளி வராத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b