Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 07 ஜனவரி (ஹி.ச.)
புதுச்சேரியில் வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் வில்லியனூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் எதிர்வரும் 50 ஆண்டுகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டத்தின் குடிநீர் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று
(ஜனவரி 07) காலை பரசுராமபுரத்தில் நடைபெற்றது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். விழாவில், முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, இரட்டை அடுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கு பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த குடிநீர் தர பூமிபூஜை செய்துள்ளோம். அரசு பொறுப்பேற்ற பிறகு உள்கட்டமைப்புக்கான பணிகள் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மூலம் செய்துள்ளோம். புதுச்சேரி ஒட்டுமொத்த வளர்ச்சி காணவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.
புதுச்சேரியில் ஏழ்மை நிலையிலுள்ள சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்துள்ள, எந்த உதவியும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், உயர்த்தப்பட்ட ரூபாய் 2,500 உதவித்தொகை வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் வழங்கப்படும். தற்போது ஏற்கெனவே தரப்படும் ஆயிரம் ரூபாய் தற்போது செலுத்திவிடுவோம். உயர்த்திய தொகையை ஜனவரி 12-க்கு பிறகு தருவோம்.
மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்பத்தலைவிகளுக்கு அறிவித்தப்படி உதவித்தொகை கோப்புகள் தயாராக உள்ளன. விரைவில் தருவோம். பொங்கல் தொகுப்பு தற்போது தருகிறோம். மேலும் பொங்கலுக்கு எந்தளவுக்கு பரிசுத்தொகை தரமுடியுமோ வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b