Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 8 ஜனவரி (ஹி.ச.)
சட்டம் மற்றும் நீதிமன்றம் என்றாலே சாமானிய மக்களுக்கு இன்றும் ஒருவிதமான தயக்கமும் பயமும் இருப்பதை மறுக்க முடியாது.
வழக்கறிஞர்களை அணுகுவதிலும், சட்ட நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதிலும் இருக்கும் சிரமங்களைக் குறைக்க மத்திய அரசு ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இனி உங்கள் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் மூலமாகவே இலவசமாகச் சட்ட ஆலோசனைகளைப் பெற முடியும். இதற்காக 'நியாய சேது' என்ற புதிய சேவையை மத்திய சட்ட மற்றும் நீதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பில் நீதி :
சட்ட அமைச்சகம், சட்ட உதவி என்பது இனி ஒரு குறுஞ்செய்தி தொலைவில் மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. சாமானிய மக்களும் எளிதாக நீதியைப் பெறும் வகையில் , இந்த நியாய சேது சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் எண்ணை உறுதிப்படுத்துவதன் மூலம், மிக விரைவாகவும் எளிதாகவும் சட்ட ஆலோசனைகளையும் தகவல்களையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
எந்தெந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்?
இந்த 'நியாய சேது' சேவையின் மூலம் பொதுமக்கள் பல்வேறு துறைகளில் சட்ட வழிகாட்டலைப் பெறலாம்:
- குடும்பத் தகராறுகள் மற்றும் திருமணச் சிக்கல்கள்.
- வீட்டு வன்முறை தொடர்பான புகார்கள்.
- சிவில் மற்றும் கிரிமினல் சட்ட விவகாரங்கள்.
- நிறுவனங்கள் தொடர்பான கார்ப்பரேட் சட்டங்கள்.
- சொத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படும் இந்தத் தளம், ஒரு வழிகாட்டியாக இருந்து மக்களுக்குத் தேவையான சட்டத் தகவல்களைத் துல்லியமாக வழங்கும்.
இந்தச் சேவையைத் தொடங்குவது எப்படி?
மத்திய அரசின் இந்த இலவச சட்ட உதவி சேவையை நீங்கள் பயன்படுத்த வேண்டுமென்றால், கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
- முதலில் உங்கள் மொபைலில் “7217711814” என்ற எண்ணைச் சேமித்துக் கொள்ளுங்கள்.
- பிறகு உங்கள் வாட்ஸ்அப்பைத் திறந்து, அந்த எண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பவும்.
- இந்தச் சேவை உங்கள் வாட்ஸ்அப்பில் 'டெலி-லா' என்ற பெயரில் தோன்றும்.
உங்கள் மொபைல் எண்ணை உறுதி செய்த பிறகு, கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் நீங்கள் சட்ட ஆலோசனைகளைப் பெறத் தொடங்கலாம்.
குவியும் புகார்கள்:
அரசு இவ்வளவு சிறப்பான திட்டத்தைக் கொண்டு வந்திருந்தாலும், தற்போதைய நிலையில் இதில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாகப் பயனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, இந்தச் சேவையைப் பயன்படுத்த முயலும்போது 'பில்ட் எரர்' வருவதாகவும், டெவலப்பரைத் தொடர்பு கொள்ளச் சொல்லி மெசேஜ் வருவதாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அரசு முறையாகச் சோதிக்காமல் விளம்பரப்படுத்துகிறதா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர். மேலும், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட 'அரட்டை' போன்ற செயலிகளைப் பயன்படுத்தாமல், மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பை ஏன் அரசு தேர்வு செய்தது என்ற விவாதமும் ஒரு புறம் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM