Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 9 ஜனவரி (ஹி.ச.)
நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவரா? ஷாப்பிங் மற்றும் உணவகங்களில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானது.
தற்போது உலகம் முழுவதும் 'கோஸ்ட் டேப்பிங்' எனும் புதிய டிஜிட்டல் பண மோசடி வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக சுற்றுலாத் தலங்களில், கார்டுகளில் உள்ள என்எஃப்சி தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி இந்தத் திருட்டு அரங்கேற்றப்படுகிறது.
கோஸ்ட் டேப்பிங் என்றால் என்ன?
இது ஒரு வகை டிஜிட்டல் மோசடியாகும். இதில் மோசடி செய்பவர்கள் காண்டாக்ட்லெஸ் கார்டுகளில் உள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் கார்டு அல்லது போனில் இருந்து பணத்தைத் திருடுவார்கள். இதற்கு கார்டு எண் அல்லது ரகசிய குறியீடு தேவையில்லை.
தற்போது பல கார்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் 'டேப்-டு-பே' வசதி உள்ளது. இதற்கு கார்டைச் செருகவோ அல்லது ரகசிய குறியீட்டை உள்ளிடவோ தேவையில்லை. மெஷினுக்கு அருகில் கார்டைக் காட்டினாலே பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
இதைத்தான் மோசடி செய்பவர்கள் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். கூட்ட நெரிசல் மிகுந்த விமான நிலையங்கள், திருவிழாக்கள் மற்றும் சந்தைகளில், ஒரு போர்ட்டபிள் என்எஃப்சி ரீடர் அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஸ்மார்ட்போனுடன் உங்களை நெருங்கும் மோசடி பேர்வழிகள், உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் கார்டு அல்லது போனிலிருந்து பணத்தைத் திருடுகிறார்கள்.
கோஸ்ட் டேப்பிங் மோசடி எப்படிச் செயல்படுகிறது?
ஆப்பிள் பே, கூகுள் பே மற்றும் காண்டாக்ட்லெஸ் கார்டுகளில் உள்ள என்எஃப்சி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது இயங்குகிறது. மோசடி செய்பவர் உங்களை மிக நெருக்கமாக (சில சென்டிமீட்டர் தூரம்) சில நொடிகள் கடந்தாலே போதும். உங்கள் அனுமதியோ, ஓடிபி-யோ இன்றி சிறிய அளவிலான தொகை உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்படும். பல நேரங்களில் போலி கடைக்காரர்கள் சிறிய தொகை என்று கூறிவிட்டு, பெரிய தொகையை 'டேப்' செய்ய வைப்பதும் உண்டு.
பின் அல்லது ஓடிபி இல்லாமல் எப்படிப் பணம் எடுக்கப்படுகிறது?
வங்கிகள் சிறிய தொகையிலான (உதாரணமாக இந்தியாவில் ₹5000 வரை) பரிமாற்றங்களுக்கு வேகமான சேவையை வழங்க பின் தேவையில்லை என்ற வசதியை வழங்குகின்றன. இதைத்தான் மோசடி செய்பவர்கள் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
கோஸ்ட் டேப்பிங் அதிகமாக நடைபெறும் நாடுகள் எவை?
தற்போது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுற்றுலாத் தலங்களில் இத்தகைய புகார்கள் அதிகம் வருகின்றன. வெளிநாட்டுப் பயணத்தின் போது மக்கள் அவசரத்தில் இருப்பதாலும், அந்நிய நாட்டுப் பண மதிப்பில் குழப்பம் இருப்பதாலும் இத்தகைய மோசடிகளை உடனே கவனிப்பதில்லை.
இந்த கோஸ்ட் டேப்பிங் மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி?
- ஸ்மார்ட்போன்களில் தேவைப்படாத நேரங்களில் என்எஃப்சி வசதியை அணைத்து வைக்கவும்.
- கார்டுகளில் இருந்து சிக்னல் வெளியேறாதபடி தடுக்கும் 'ஆர்எஃப்ஐடி பிளாக்கிங்' வாலட் அல்லது கார்டு கவர்களைப் பயன்படுத்தவும்.
- மொபைல் வாலட்களில் பிங்கர் பிரிண்ட் அல்லது ஃபேஸ் லாக் கட்டாயம் ஆக்டிவேட் செய்யவும்.
- வங்கிப் பரிமாற்றங்களுக்கான உடனடி எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் நோட்டிபிகேஷன்களை ஆன் செய்து வைக்கவும்.
- சாலையோரக் கடைகள் அல்லது அடையாளம் தெரியாத இடங்களில் 'டேப்-டு-பே' செய்வதைத் தவிர்க்கவும்.
- கார்டைச் சொருகுவதை விட 'டேப்-டு-பே' பாதுகாப்பானது என்று கூறினாலும், கூட்ட நெரிசலில் கூடுதல் கவனம் தேவை.
- விழிப்புணர்வுடன் இருந்தால் உங்கள் உழைப்பின் பணத்தைப் பாதுகாக்கலாம்.
மோசடி நடந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
முதலில் உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து கார்டை பிளாக் செய்யவும்.
பின், உங்கள் வங்கியின் மொபைல் ஆப் மூலமாக அந்தப் பரிமாற்றத்தை 'டிஸ்பியூட்' (புகார்) செய்யவும். தேசிய சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண் 1930-க்கு அழைத்து புகார் பதிவு செய்யவும்.
Hindusthan Samachar / JANAKI RAM