Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 09 ஜனவரி (ஹி.ச.)
தேசிய சாலைப்பாதுகாப்பு மாத விழாவையொட்டி ஜனவரி 1 முதல் 31.01.2026 வரை சாலைப்பாதுகாப்பு மாத விழா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதன்ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்ட வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் இன்றுநடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின், துவக்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது,
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு இன்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தியும், சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்கும் பொருட்டும் கன்னியாகுமரி மாவட்ட வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நடத்தப்பட்டு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வாகனத்தினை இயக்க வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்திடும் வகையில் சாலை பாதுகாப்பு! உயிர் பாதுகாப்பு! என்ற பொன்மொழியுடன் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திட இப்பேரணி நடத்தப்படுகிறது.
இப்பேரணியானது வடசேரி பேருந்துநிலையத்தில் துவக்கி, வேப்பமூடு மாநகராட்சி பூங்காவில் நிறைவடையும். இப்பேரணியில் கன்னியாகுமரி மாவட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாணவர்கள், வாகன விற்பனையாளர்கள், போக்குவரத்து பணியாளர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் உட்பட 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு நாளும் நாம் சாலையை பயன்படுத்துகிறோம். இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் அல்லது சைக்கிள் என ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் சாலையை பயன்படுத்துகிறோம். சாலை பாதுகாப்பை உறுதி செய்வது போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை உள்ளிட்டவர்களின் பங்கு தான் என்று கூறுகின்றார்கள். ஆனால் மிக முக்கியமான பங்கு பொதுமக்கள் ஆகிய உங்களுக்கு தான் உள்ளது.
மேலும் சாலை விதிகளை பின்பற்றமால் சாலைகளில் வாகனங்களை அதிவேகமாக செலுத்துவதாலும், அலைப்பேசியில் பேசிக்கொண்டு கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுவதாலும், மது போதையினால் வாகனங்களை ஓட்டுவதாலும், அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில் சராசரியாக 60,900 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
இதில் 18,500 பேர் இறந்துள்ளனர். குறிப்பாக அதிவேகத்தில் சென்ற 75% பேர் இறந்துள்ளார்கள். அதிவேகத்தில் சென்ற 12500 பேர் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் இறந்துள்ளார்கள். இந்த 12500 குடும்பங்களின் நிலை என்ன திடீரென ஒருவர் நாம் குடும்பத்தில் இறந்தால் அந்த குடும்பம் எந்த அளவுக்கு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும். எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும் தங்கள் குடும்பங்களை மனதில் வைத்துக் கொண்டு வாகனங்கள் ஓட்டுங்கள்.
மேலும் காவல்துறையை பார்த்தால் மட்டும்தான் ஹெல்மெட் அணிவது போன்ற செயலில் ஈடுபடாதீர்கள். பக்கத்தில் தானே போயிட்டு வாரேன் அப்படின்னு சொல்லிட்டு ஹெல்மெட் போடாம இருக்காதீங்க. கண்டிப்பா ஹெல்மெட் போடுங்க நீங்க ஹெல்மெட் போடுவதை பார்த்து உங்க பிள்ளைங்க நாளைக்கு போடுவாங்க. அதை பக்கத்து வீட்டுக்காரங்க உறவினர்கள் என அனைவரும் ஹெல்மெட் போடுவாங்க.
எனவே பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், சமூதாயத்தில் தங்களது பொறுப்பினை அறிந்து சாலைவிதிகளை கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் தனியாக வாகனம் ஓட்டினாலும் அல்லது உங்கள் குடும்பத்தினருடன் வாகனம் ஓட்டினாலும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது எப்போது உங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
மேலும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் விபத்துக்களை தவிர்க்கலாம். கண்டிபாக தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறினால் வழங்கப்படும் அபராதங்கள், விதிக்கப்படும். அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து விபத்துக்களை தவிர்க்கும் வகையில் வாகனம் ஓட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ்பாபு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், கலைச்செல்வி, கன்னியாகுமரி மாவட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், வாகன விற்பனையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Hindusthan Samachar / vidya.b