Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜனவரி (ஹி.ச)
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, 02.08.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை தேனாம்பேட்டை மண்டலம், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ
இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மண்டலத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் மொத்தம் 15 “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, இதுவரை பன்னிரெண்டு கட்டங்களாக நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்களில் இதுவரை 29,267 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, தண்டையார்பேட்டை மண்டலம், கல்யாணபுரம் சென்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (10.01.2026) சனிக்கிழமை “நலம் காக்கும் ஸ்டாலின்“ திட்ட முகாம் 13ஆவது கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம். தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்தியமுறை மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை ஆகிய 17 துறைசார் நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனை. முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனை,காசநோய், தொழுநோய் பரிசோதனை, ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
மேலும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது.
தண்டையார்பேட்டை மண்டலம், கல்யாணபுரம் சென்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (10.01.2026) சனிக்கிழமை நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b