Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தின் விவசாயம் மற்றும் நீர்வளத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பெய்யும்.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை குறித்த முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
TNAU கணிப்பின்படி, பருவமழைக் காலத்தில் தமிழகத்திற்கு சுமார் 468 மி.மீ. மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான மழைப்பொழிவு இருக்காது என்றும், மழையின் அளவு மற்றும் பரவலில் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபாடு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை விவசாயத்திற்கு முக்கியமானதாக இருப்பதால், விவசாயிகள் முன்கூட்டியே சாகுபடி பணிகளைத் திட்டமிடுவது அவசியம். குறிப்பாக, விதைப்பு, உரமிடுதல், பாசனம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்போது வானிலை நிலவரம் மற்றும் வேளாண் வானிலை ஆலோசனைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
கனமழை பெய்யும் காலங்களில் கிடைக்கும் உபரி நீரை பண்ணைக் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேமித்து வைப்பதன் மூலம், மழை குறையும் காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மானாவாரி நிலங்களில் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்க மூடாக்கு அமைத்தல், வரப்புகளை முறையாக அமைத்தல் மற்றும் நீர் சேமிப்பு முறைகளைப் பின்பற்றுவது பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், கடலோர மாவட்டங்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அல்லது புயல் போன்ற வானிலை நிகழ்வுகளால் குறுகிய காலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், சில பகுதிகளில் மழை இடைவெளி அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே, விவசாயிகள் மழை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப விதைப்பு மற்றும் சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மழை அதிகமாகும் காலங்களிலும், மழை குறையும் காலங்களிலும் பயிர்களைப் பாதுகாக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிடுவது இந்த பருவத்தில் மிகவும் அவசியமாகும்.
Hindusthan Samachar / Durai.J