பெங்களூரு திரையரங்கில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - தம்பதி உள்பட 3 பேர் காயம்
பெங்களூரு , 01 அக்டோபர் (ஹி.ச.) பெங்களூரு பீண்யா தாசரஹள்ளி பகுதியில் உள்ள பாரதி திரையரங்கில் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது, மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் தம்பதி உள்பட 3 பேர் காயமடைந்தனர். அவர்களுடன் திரைப்படம் பார்க்க வந்த
A


பெங்களூரு , 01 அக்டோபர் (ஹி.ச.)

பெங்களூரு பீண்யா தாசரஹள்ளி பகுதியில் உள்ள பாரதி திரையரங்கில் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது, மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் தம்பதி உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

அவர்களுடன் திரைப்படம் பார்க்க வந்த சிறிய குழந்தை அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது.

பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற மதியம் பாரதி திரையரங்கில் கன்னட திரைப்படமான ‘பிரேமதா ஊரலி’ படத்தின் காட்சி நடைபெற்றது.

அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததாக கூறப்படுகிறது. இதன் தாக்கத்தால் திரையரங்கின் உள்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையில் உள்ள அஸ்பெஸ்டாஸ் தாள்கள் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் அலங்காரப் பகுதிகள் திடீரென இடிந்து பார்வையாளர்கள் மீது விழுந்தன.

இதில் தம்பதி உள்பட 3 பேருக்கு தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.

மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டதும், திரையரங்கில் இருந்த மற்ற பார்வையாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.

இதையடுத்து திரைப்படக் காட்சி உடனடியாக நிறுத்தப்பட்டது.

காயமடைந்த 3 பேரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அவர்கள் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்தைத் தொடர்ந்து திரையரங்கு நிர்வாகம், அங்கு படம் பார்க்க வந்திருந்த மற்ற பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணத்தை முழுமையாகத் திருப்பி வழங்கியது.

திரையரங்கை முறையாக பராமரிக்காததே மேற்கூரை இடிந்து விழுந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்து போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA