Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 01 அக்டோபர் (ஹி.ச.)
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற பிளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சம்பவத்தின்போது, காயமடைந்த நிலையிலும் துணிச்சலுடன் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அவரை நினைத்து இந்தியாவே பெருமைப்படுவதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட எப்.இசட்.1073 என்ற பிளைதுபாய் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி, கேப்டனாக இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கியதாக தெரிகிறது.
இதில் காயமடைந்த போதிலும், ஸ்மித் மச்சார் துணிச்சலை இழக்காமல் செயல்பட்டார். அவர் விமானி அறையின் கதவை திறந்ததும், அங்கு வந்த பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் துணை விமானியை தடுத்து கட்டிப்போட்டனர். இதன் மூலம் விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, அதில் பயணம் செய்த 174 பேரும் உயிர் தப்பினர்.
மும்பை கத்கோபர் கிழக்கு பகுதியை சேர்ந்த ஸ்மித் மச்சார், பணிக்காக துபாயில் வசித்து வருகிறார். பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அவரது துணிச்சலான செயலுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து மத்திய மந்திரி ராம்மோகன் நாயுடு தனது எக்ஸ் தள பதிவில்,
பல உயிர்களைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவரை நினைத்து இந்தியாவே பெருமைப்படுகிறது. அவருக்கு அரசு துணை நிற்கும். உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையிலும் 100-க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றியுள்ளார். இதுதான் இந்தியாவின் அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை
கத்திக்குத்தில் காயமடைந்த ஸ்மித் மச்சார், சவுதி அரேபியாவின் தபுக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது உடல்நிலை குறித்த முழுமையான விவரங்களை அறிய இந்திய தூதரகம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA