தங்களது குடும்ப சொத்துகள் மற்றும் ரேவந்த் ரெட்டி குடும்பத்தினரின் சொத்துகள் விசாரணைக்கு தயாரா? - ரேவந்த் ரெட்டிக்கு கே.டி.ஆர். பகிரங்க சவால்
ஐதராபாத் , 01 அக்டோபர் (ஹி.ச.) தெலுங்கானாவில் குடும்ப சொத்துகள் தொடர்பான விவகாரம் மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
A


ஐதராபாத் , 01 அக்டோபர் (ஹி.ச.)

தெலுங்கானாவில் குடும்ப சொத்துகள் தொடர்பான விவகாரம் மீண்டும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

தங்களது குடும்ப சொத்துகள் மற்றும் ரேவந்த் ரெட்டி குடும்பத்தினரின் சொத்துகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு அமர்வு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அந்த விசாரணையில் தங்கள் தரப்பில் தவறு இருப்பது நிரூபிக்கப்பட்டால், எந்த தண்டனையையும் ஏற்க தயாராக இருப்பதாகவும் கே.டி.ஆர். தெரிவித்தார்.

சிரிசில்லாவில் நடந்த நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி தங்களது குடும்ப சொத்துகள் குறித்து தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கே.டி.ஆர்., ‘‘தொழில் செய்வது தவறா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த 2006-ம் ஆண்டு ஓட்டல் தொழிலை தொடங்கியதாகவும், தற்போது 3 ஓட்டல்கள் இருப்பதாகவும் அவர் கூறினார். தனது சொத்து விவரங்கள் அனைத்தையும் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கைத்தறி தொழிலாளர்கள்

சிரிசில்லா பகுதியில் கைத்தறி தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்கு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் கே.டி.ஆர். குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தற்கொலை செய்து கொண்ட 35 கைத்தறி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்ததாக அவர் கூறினார்.

ஆனால், சிரிசில்லா பயணத்தின்போது கைத்தறி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேசாமல், அரசியல் விமர்சனங்களில் மட்டுமே முதல்-மந்திரி கவனம் செலுத்தியதாக கே.டி.ஆர். விமர்சித்தார்.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்

தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால்தான் தங்கள் குடும்பத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக கே.டி.ஆர். கூறினார்.

மக்கள் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை அரசை தொடர்ந்து கேள்வி கேட்போம் என்றும், மக்களின் பிரச்சினைகளுக்காக தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கே.டி.ஆர். திட்டவட்டமாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA