Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 01 அக்டோபர் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட பெணந்தோடு பகுதியில், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்ததாக கூறப்பட்ட பன்றி பண்ணைக்கு அதிகாரிகள் நிரந்தரமாக சீல் வைத்துள்ளனர்.
சுமார் 9 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பெணந்தோடு பகுதியில் லூக்கா என்பவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் பன்றி பண்ணை செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இங்கு ஆயிரக்கணக்கான பன்றிகள் வளர்க்கப்பட்ட நிலையில், அவற்றுக்கான உணவாக கேரளாவில் இருந்து தினசரி பல டன் இறைச்சி மற்றும் உணவுக் கழிவுகள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதுடன், கழிவுநீர் தேங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக சுற்றுவட்டார மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நீரோடை வழியாக கோதையாற்றில் கலப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பண்ணையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. போராட்டங்களில் ஈடுபட்ட சிலருக்கும், பண்ணை நிர்வாகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். திருவட்டார் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் திற்பரப்பு பேரூராட்சி அலுவலர்கள், போலீஸ் பாதுகாப்புடன் பண்ணையில் இருந்த பன்றிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் பண்ணை உரிமையாளரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, பண்ணையில் இருந்த 500-க்கும் மேற்பட்ட பன்றிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு பன்றி பண்ணைக்கு அதிகாரிகள் நிரந்தரமாக சீல் வைத்தனர்.
பல ஆண்டுகளாக தொடர்ந்த துர்நாற்றம், கழிவுநீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பண்ணை மூடப்பட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றும், தங்களது வாழ்வாதாரமும் இயல்பு வாழ்க்கையும் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V