பர்தா அணிந்து நகை வாங்குவது போல் நடித்து 5 பவுன் நகை திருட்டு - பெண் ஒருவர் கைது..!
விருதுநகர் 01 அக்டோபர் (ஹி.ச.) விருதுநகர் சாத்தூர் மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருபவர் மதன் (42). கடந்த 26-ம் தேதி இவரது கடைக்கு பர்தா அணிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்துள்ளார். நகைகளை வாங்குவது போல் கடை உரிமையாளரிடம் பேசிய
Snatched


விருதுநகர் 01 அக்டோபர் (ஹி.ச.)

விருதுநகர் சாத்தூர் மெயின் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருபவர் மதன் (42).

கடந்த 26-ம் தேதி இவரது கடைக்கு பர்தா அணிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்துள்ளார்.

நகைகளை வாங்குவது போல் கடை உரிமையாளரிடம் பேசிய அந்தப் பெண், அவரது கவனத்தை திசை திருப்பியதாக கூறப்படுகிறது.

இதனை பயன்படுத்திக் கொண்ட பெண், கடையில் இருந்த சுமார் 5 பவுன் நகையை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கடை உரிமையாளர் மதன் அளித்த புகாரின் பேரில், சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

திருட்டு நடைபெற்ற கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்தப் பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்களையும் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதன் அடிப்படையில், சந்தேகத்துக்குரிய பெண்ணின் செல்போன் எண்ணை போலீசார் கண்டறிந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, இன்று காலை தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் வைத்து அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர் தஞ்சாவூரைச் சேர்ந்த வினோத்தின் மனைவி பிரியங்கா என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதேபோன்ற முறையில் பல்வேறு பகுதிகளில் நகைக்கடைகளில் திருட்டில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக சென்னை, புதுச்சேரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகளுக்குச் சென்று, நகை வாங்குவது போல் நடித்து கவனத்தை திசைதிருப்பி திருட்டில் ஈடுபட்டதாகவும், இதுதொடர்பாக ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாத்தூரில் பர்தா அணிந்து நகைக்கடைக்குள் சென்று நூதன முறையில் நகை திருடியதாக பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V