Enter your Email Address to subscribe to our newsletters

ஸ்ரீவில்லிபுத்தூர், 01 அக்டோபர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட மின்தடை காரணமாக பல்வேறு பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மின்வாரியம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இன்று மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரும் பல இடங்களில் மின்சாரம் முழுமையாக மீண்டும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி, முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களும் இருளில் மூழ்கியதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மடவார்வளாகம், மஞ்சபுத்துத் தெரு, ரத வீதிகள், வ.உ.சி. நகர் மற்றும் வன்னியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் தடைபட்டதாக கூறப்படுகிறது.
கனமழைக்கு மத்தியில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மாதாந்திர பராமரிப்பு பணிகளின்போது மின்வாரிய ஊழியர்களின் பணிகளை அதிகாரிகள் உரிய முறையில் கண்காணிக்காததே சில பகுதிகளில் மின்விநியோகம் தாமதமாக சீராக காரணமாக இருந்ததாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மழை நேரத்தில் மின்தடை நீடிப்பதால் வீடுகளில் உள்ள மின்சாதனங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதுடன், இரவு நேரங்களில் தெருக்கள் இருளில் மூழ்குவதால் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து, மின்விநியோகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், மழைக்காலங்களில் மின்தடை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உரிய தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V