Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 01 அக்டோபர் (ஹி.ச.)
திருவள்ளூரில் பானிபூரி தள்ளுவண்டி கடையை நடத்தி வந்த வடமாநில இளைஞர்கள் இருவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் நேதாஜி சாலை பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுசில்பாபு (27), கொலு குமார் (30) ஆகியோர் பானிபூரி மற்றும் ஜிலேபி உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இவர்களது கடையில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரினீத் தலைமையிலான காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போலீசார் சந்தேகம் ஏற்படாத வகையில் சாதாரண உடையில் பானிபூரி கடைக்குச் சென்றனர். அங்கு பானிபூரி கேட்டபோது, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இலையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திலேயே இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பானிபூரி தள்ளுவண்டி கடைக்கு அருகில் அவர்கள் வசித்து வந்த வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் சென்றுள்ளனர்.
அப்போது போலீசார் வருவதை கவனித்த வீட்டில் இருந்த பெண் ஒருவர், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கஞ்சாவை ஜன்னல் வழியாக வெளியே வீச முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் வீசிய கஞ்சா வெளியே விழாமல் ஜன்னல் கம்பியில் சிக்கி தொங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஜன்னல் கம்பியில் சிக்கியிருந்த கஞ்சாவை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சுசில்பாபு மற்றும் கொலு குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பானிபூரி விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடையை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V