ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு வெண்கலப் பதக்கங்கள் வென்ற ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு!
தமிழ்நாடு, 10 அக்டோபர் (ஹி.ச.) ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறை இயக்குநராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழ
ஜோஷனா


தமிழ்நாடு, 10 அக்டோபர் (ஹி.ச.)

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறை இயக்குநராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் விளையாட்டுத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஜோஷ்னா சின்னப்பா, 2026ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு வெண்கலப் பதக்கத்தையும், இந்திய மகளிர் அணியின் சார்பில் மற்றொரு வெண்கலப் பதக்கத்தையும் அவர் வென்றார்.

இவரது சாதனையைப் பாராட்டி, கடந்த 8ஆம் தேதி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ஜோஷ்னா சின்னப்பாவுக்கு ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் உத்தரவின்படி, விளையாட்டுத் துறை துணை இயக்குநர் பொறுப்பில் இருந்த அவருக்கு, விளையாட்டுத் துறை இயக்குநராகப் பதவி உயர்வு வழங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஸ்குவாஷ் விளையாட்டில் நீண்டகாலமாகச் சாதித்து வரும் ஜோஷ்னா சின்னப்பா, 2002 முதல் 2026 வரை நடைபெற்ற ஏழு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ளார். 2014ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கமும், அதே ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் சேர்த்து, அப்போட்டிகளில் அவர் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய நீண்டகாலப் பங்களிப்பு மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பெற்ற சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜோஷ்னா சின்னப்பாவின் சாதனைகளுக்குத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், அவரது எதிர்கால விளையாட்டுப் பயணமும் பணியும் சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam