Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் 100 சதவீத வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு விழா வரும் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 2027 நவம்பர் 4-ஆம் தேதி வரை ஓராண்டு காலத்துக்கு இந்த விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த 100 சதவீத வகுப்புவாரி பிரதிநிதித்துவம் சென்னை மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூகநீதியின் தொட்டில் தமிழ்நாடுதான் என்பதை உலகுக்கு உணர்த்திய இந்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாடுவதுடன், அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதே சமூகநீதியின் இலக்கு என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சமூகநீதி வரலாறு நீண்ட பாரம்பரியம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், 1881-ஆம் ஆண்டு கோலாப்பூர் சமஸ்தானத்தில் பிராமணர் அல்லாதவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதையும், 1918-ஆம் ஆண்டு மைசூர் சமஸ்தானத்தில் பிராமணர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் முதன்முதலில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது சென்னை மாகாணத்தில்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி ஆட்சியில் அனைத்து சமூகங்களுக்கும் 100 சதவீத வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்குவதற்கான அரசாணை எண் 613 பிறப்பிக்கப்பட்டதாகவும், ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் உயர்வகுப்பினரின் எதிர்ப்பால் அந்த அரசாணையை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, 1922-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டபோதும் அதைச் செயல்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 1927-ஆம் ஆண்டு முதலமைச்சர் பி. சுப்பராயன் தலைமையிலான ஆட்சியில், கல்வித்துறை அமைச்சர் முத்தையா முதலியாரின் முயற்சியால் அக்டோபர் 26-ஆம் தேதியிட்ட 1071 எண் கொண்ட அரசாணை நவம்பர் 4-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இந்த அரசாணையின்படி, பிராமணர் அல்லாத இந்துக்களுக்கு 41.67 சதவீதம், பிராமணர்கள், இஸ்லாமியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் மற்றும் இந்தியக் கிறித்தவர்களுக்கு தலா 16.67 சதவீதம், பட்டியலின மக்களுக்கு 8.33 சதவீதம் என மொத்தம் 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், 1947-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் மூலம் இடஒதுக்கீட்டு விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும், இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
செண்பகம் துரைராஜன் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து 1950-ஆம் ஆண்டில் இந்த இடஒதுக்கீட்டு முறை முடிவுக்கு வந்ததாகவும், பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா உள்ளிட்டோர் நடத்திய போராட்டங்களின் விளைவாக 1951-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவு பல்வேறு காலகட்டங்களில் உயர்த்தப்பட்டு, 1990-ஆம் ஆண்டில் 69 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1989-ஆம் ஆண்டு வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமூகங்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதையும், 2008-ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடும், 2009-ஆம் ஆண்டு அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்கப்பட்டதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றின் பெரும்பகுதி இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியவில்லை என்றும், அவர்களுக்கு இந்த வரலாற்றை எடுத்துரைப்பதுடன் இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும், அனைத்து சமூகங்களுக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் சமமாகக் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சாதிகளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 115 சாதிகளும், பட்டியலினப் பிரிவில் 76 சாதிகளும் உள்ள நிலையில், பல சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் குறிப்பிடத்தக்க அளவில் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்குத் தீர்வாக, ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளின் அடிப்படையில் உள் ஒதுக்கீடுகளும் தனி இடஒதுக்கீடுகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, வரும் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி 2027-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி வரை 100 சதவீத வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக இடஒதுக்கீட்டின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளை வெளியிடவும், அதன் அடிப்படையில் தேவையான சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P