Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 10 அக்டோபர் (ஹி.ச.)
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவிப்பதுடன், கருக்கலைப்புக்கும் ஏற்பாடு செய்யும் கும்பல் இடைத்தரகர்கள் மூலம் செயல்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தக் கும்பலைத் தொடர்புகொண்ட சுகாதாரத் துறையினர், கர்ப்பிணிகளை அனுப்பி வைத்து கண்காணித்தனர்.
அப்போது, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மேக்கலாம்பட்டி கிராமத்தில் மைதிலி என்பவரது வீட்டுக்கு கர்ப்பிணிகள் ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டு, முறையான மருத்துவக் கல்வி பெறாத நபர்களால் இயந்திரத்தின் உதவியுடன் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவிக்கப்பட்டது தெரியவந்தது. இதற்காக ஒவ்வொரு கர்ப்பிணியிடமும் ரூ.17,000 வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஏ.ஜெகதீசன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அந்தக் கும்பலைப் பின்தொடர்ந்து சென்று, சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் வடிவேலு, பரிமளா ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அப்போது, அங்கிருந்து தப்பிக்க முயன்ற வடிவேலு, மருத்துவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் பிடித்த மருத்துவத் துறையினர், கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்திய இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே, கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்ததாக வடிவேலு, பரிமளா ஆகிய இருவர் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மூன்று வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P