Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 அக்டோபர் (ஹி.ச.)
காவிரி நீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பா. கருணாகரன் கூடுதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 15.02 டி.எம்.சி. நிலுவை நீரை உடனடியாகத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 10 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1.30 டி.எம்.சி. வீதம் நீர் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் கோரப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 7-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்திற்கு வழங்கப்படாத நீரால் 0.940 டி.எம்.சி. பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் குறிப்புகளில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளபடி, தொடர்ந்து நீர்வரத்து இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக, நிலுவையில் உள்ள நீரை வழங்குவதுடன், ஆணையத்தின் உத்தரவுகளையும் முறையாகச் செயல்படுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே இந்தக் கூடுதல் மனுவின் முக்கியக் கோரிக்கையாகும்.
Hindusthan Samachar / LOGESHWARI V