Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 அக்டோபர் (ஹி.ச.)
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின்போது பல மாநிலங்களில் ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே திருத்தப் பணிகள் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடுகள் இருப்பதாகக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த காந்தி ஜெயந்தியன்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதனைத் தொடர்ந்து, மும்பை சிவாஜி பார்க்கிலும் போராட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், டெல்லி காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், டெல்லியை ஒட்டியுள்ள மாநில எல்லைகளில் வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீசார், தங்களது சீருடையுடன் உடலில் பொருத்தப்படும் பாடி கேமராக்களையும் அணிய உள்ளனர்.
இந்தக் கேமராக்கள் குறைந்த வெளிச்சத்திலும் காட்சிகளைப் பதிவு செய்யும் திறன் கொண்டவை.
போராட்டத்தின்போது ஏற்படும் சம்பவங்களை ஆதாரத்துடன் பதிவு செய்வதற்கும், போலீசாரின் நடவடிக்கைகள் தொடர்பாக எழும் புகார்களை விசாரிப்பதற்கும் இவை உதவும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V