Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 அக்டோபர் (ஹி.ச.)
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் வழியிலான இணையச் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அனுமதி நடைமுறைகள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் தனது நிறுவனத்தின் சேவை தொடங்குவதற்குத் தடைகள் இருப்பதாக மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார்.
சில செல்வாக்கு மிக்க வர்த்தக நிறுவனங்கள் இந்திய இணையச் சந்தையில் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் குழுமத்
தலைவர் முகேஷ் அம்பானி தொடர்பாகவும் அவர் கருத்துகளைப் பதிவிட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, செயற்கைக்கோள் தகவல் தொடர்புத் துறையில் எந்தவொரு நிறுவனத்திற்கும் தனிப்பட்ட முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோவின் செயற்கைக்கோள் தொடர்பு சேவைப் பிரிவு மற்றும் பார்தி ஏர்டெல் ஆதரவு பெற்ற யூடெல்சாட் ஒன்வெப் ஆகிய நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் தகவல் தொடர்புச் சேவைகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அமேசானின் குயிப்பர் நிறுவனமும் இந்தியாவில் இத்தகைய சேவைகளை வழங்க ஆர்வம் காட்டியுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகளை அந்த நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், உரிமம் பெற்றிருப்பது மட்டுமே சேவையை உடனடியாகத் தொடங்குவதற்குப் போதுமானதல்ல என்றும் அமைச்சர் விளக்கினார்.
ஒவ்வொரு நிறுவனமும் சேவையைத் தொடங்குவதற்கு முன்பாக, அரசு நிர்ணயித்துள்ள பாதுகாப்பு நிபந்தனைகளைத் தனித்தனியாகப் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
செயற்கைக்கோள் இணையச் சேவைகளுக்கான அலைக்கற்றைக் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்தியாவில் இணையச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்புகள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என்றும், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பொருத்தமான சேவையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார்..
Hindusthan Samachar / LOGESHWARI V