மனைவியின் அக்கா, தங்கையின் புகைப்படங்களை ஆபாசப் படங்களாக தயாரித்து மிரட்டிய இளைஞர் கைது
நாமக்கல், 10 அக்டோபர் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வரும் இளங்கோ (25) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
Thuthkkudi


நாமக்கல், 10 அக்டோபர் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வரும் இளங்கோ (25) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பிறகு இளங்கோ, தனது மனைவியின் குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில், மனைவியின் அக்கா மற்றும் தங்கையின் சாதாரண புகைப்படங்களை ரகசியமாகச் சேகரித்த இளங்கோ, அவற்றை நவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர், அந்தப் படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, மார்பிங் செய்யப்பட்ட படங்கள் இளங்கோவின் மின்னணு சாதனங்களில் இருந்தது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த இளங்கோவை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏஐ தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து மிரட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V