அரசு முதுநிலை மருத்துவர்களின் தற்காலிகப் பணி மாறுதல் - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.) அக்டோபர் 2026-ல் முதுநிலை மருத்துவப் படிப்பை முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணி மாறுதல் ஆணை குறித்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
Arunraj


சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.)

அக்டோபர் 2026-ல் முதுநிலை மருத்துவப் படிப்பை முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணி மாறுதல் ஆணை குறித்து மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் மருத்துவக் கல்வி மற்றும் கலந்தாய்வு அட்டவணைகளில் தாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் முதுநிலைப் படிப்பை முடித்த மருத்துவர்களுக்கான கலந்தாய்வு, டிசம்பர் 2025-ல்தான் நடைபெற்றது.

இதனால் இடைப்பட்ட காலத்திற்கான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பணிசார்ந்த நடைமுறைகளில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தாமதங்களால் நடப்பாண்டில் படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே தற்காலிகப் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

மருத்துவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட முதல் மூன்று விருப்பப் பணியிடங்களின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அங்கு காலியிடங்கள் இல்லாதபட்சத்தில் அவர்களின் குடும்பச் சூழல் மற்றும் தொலைதூர இடங்களுக்கு இடம்பெயர்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு அருகிலுள்ள பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பணியிட மாற்றத்தால் மருத்துவர்களின் ஊதியம் பாதிக்கப்படாமல் இருக்க, அதிகபட்சம் 30 நாட்களுக்குள் பணிமாற்ற நடைமுறைகளை நிறைவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் பணியில் சேர்ந்த முதல் மாதத்திலேயே ஊதியம் தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாணை எண் 131-ன் வழிகாட்டுதல்களின்படி, தற்போது தற்காலிகமாக நிரப்பப்பட்டுள்ள பணியிடங்கள் அடுத்த கலந்தாய்வில் கட்டாயம் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சிவில் மருத்துவப் பட்டியலில் (CML) உள்ள பணிமூப்பு அடிப்படையில் வெளிப்படையான முறையில் விரைவில் வழக்கமான கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது தற்காலிகப் பணி மாறுதல் பெற்றுள்ள மருத்துவர்களும் அந்தக் கலந்தாய்வில் பங்கேற்று, தங்களது தகுதி மற்றும் பணிமூப்பின் அடிப்படையில் விருப்பமான பணியிடங்களைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வரும் ஆண்டுகளில் இதுபோன்ற காலதாமதங்கள் ஏற்படாமல் இருக்கவும், கலந்தாய்வுகளை உரிய காலத்தில் நடத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V