Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 அக்டோபர் (ஹி.ச.)
இந்தியக் கல்வி முறையில் நிலவும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவர்களிடம் நேரடியாகக் கலந்துரையாடும் வகையில், ராகுல் காந்தி மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மகாராஷ்டிராவின் புனே, நாசிக் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை தீவுத் திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்களிடையே ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.
இதற்காக இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர், நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு அவர் சென்றார்.
அங்கு ராகுல் காந்திக்கு விஜய் மதிய விருந்து அளித்தார்.
தொடர்ந்து, இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்தச் சந்திப்பின்போது தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி நிர்வாகிகள் இன்றி இருவரும் தனியாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விஜய்யும் ராகுல் காந்தியும் நீலாங்கரையில் இருந்து ஒரே காரில் புறப்பட்டனர்.
பின்னர், பாலவாக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் உணவகத்திற்குச் சென்று தேநீர் அருந்தினர்.
தமிழக முதல்-அமைச்சரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்துக் கொண்டதை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V