Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 அக்டோபர் (ஹி.ச.)
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தெரிவித்த கருத்துகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அமைதியான முறையில் கூடுவதற்கான உரிமை அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வலுவான நிறுவனங்கள், சுதந்திரமான நீதித்துறை மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் மூலம் இவ்வுரிமை பாதுகாக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் இருப்பதைப் போலவே, இந்தியாவிலும் பொது அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணும் வகையில் குடிமக்கள் தங்களது உரிமைகளைப் பயன்படுத்துகின்றனர்.
சட்ட அமலாக்க அமைப்புகள் சட்டத்தின்படியே செயல்படுகின்றன. குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்பு நீதிமன்றங்கள் மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ள கவலைகள் தேவையற்றவை என்றும், அவை இந்தியாவின் உள்விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடு என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவிப்பதில் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகவும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
அண்டை நாடுகளில் போராட்டங்களின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்தும், அந்த அலுவலகத்தின் அருகாமையிலேயே சட்ட அமலாக்க அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் அந்த அலுவலகத்தின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதுடன், பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புகள் மீதான நம்பிக்கையையும் குறைக்கின்றன என இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P