செவிலியர்களுடன் சுமுக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- தி.மு.க மருத்துவ அணிச் செயலாளர் எழிலன்
சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.) செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவர்களை அழைத்துச் சுமுக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய
எழிலன்


சென்னை, 12 அக்டோபர் (ஹி.ச.)

செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அவர்களை அழைத்துச் சுமுக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

செவிலியர்கள் தேர்தல் வாக்குறுதிகளில் அளிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்து வருகின்றனர். மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறையினர் கைது செய்தது கண்டனத்துக்குரியது என்றார்.

தடுப்புக் காவல் நடவடிக்கை என்பது தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது. ஆனால், மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவப் பணியாளர்களைத் தடுப்புக் காவலில் வைக்கின்றனர் என்று விமர்சித்தார்.

மேலும், செவிலியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்தது யார்? தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதால்தானே அவர்கள் அதனை நிறைவேற்றக் கோரிப் போராடுகின்றனர்? எங்களால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, டெல்லியில் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் என்று கூறிவிட்டு, சென்னையில் மாணவர்களுடன் கலந்துரையாட ராகுல் காந்தி வருகிறார் என்றும், டெல்லியில் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையத்தை மூடிவிட்டு, சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்க நிகழ்வில் பங்கேற்கப் பிரதமர் வருகிறார் என்றும் குறிப்பிட்டார். இரண்டு தேசிய கட்சிகளும் இவ்வாறுதான் செயல்படுகின்றன என விமர்சித்தார்.

செவிலியர்களின் போராட்டத்துக்குத் தீர்வு காண அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்திய எழிலன், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று விஜய் மீது மக்கள் எதிர்பார்ப்பு வைத்திருந்த நிலையில், தற்போது நடைபெறும் போராட்டங்கள் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam