தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
தஞ்சாவூர், 13 அக்டோபர் (ஹி.ச.) தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில், லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு
மருத்துவமனை


தஞ்சாவூர், 13 அக்டோபர் (ஹி.ச.)

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில், லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு தஞ்சாவூர் மட்டுமின்றி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தாய்மார்களின் உறவினர்களிடம், உள்ளே செல்வதற்கும், பிறந்த குழந்தையைப் பார்ப்பதற்கும் அங்குள்ள பணியாளர்கள் பணம் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1,000, பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 எனப் பணம் கேட்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையில், ஆய்வாளர்கள் பத்மாவதி, சரவணன், அருண் பிரசாத் உள்ளிட்டோர் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த காவலர் உள்ளிட்ட பணியாளர்களிடம் இருந்து கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மருத்துவமனை பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் லஞ்சம் கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, விசாரணையின் முடிவில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam