Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி,13 அக்டோபர் (ஹி.ச.)
கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்து வரும் சூழலில், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதால் சிமெண்ட் விலை வரும் வாரங்களில் உயரக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ஒரு மூட்டை சிமெண்டின் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ‘எம்.கே. ரிசர்ச்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிமெண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நிலக்கரி மற்றும் பெட்கோக் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன், மின்சாரம் மற்றும் பிற உற்பத்தி உள்ளீடுகளுக்கான செலவுகளும் உயர்ந்துள்ளன.
இதனால் சிமெண்ட் நிறுவனங்களுக்கு உற்பத்திச் செலவுச் சுமை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தச் செலவுகளைச் சமாளிக்கும் வகையில், நிறுவனங்கள் சிமெண்ட் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, வரும் வாரங்களில் மூட்டைக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்வு அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிமெண்ட் மூட்டைக்கு சுமார் ரூ.15 வரை விலை உயர்த்தப்பட்டதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவுகள் உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்ததால், இந்த விலை உயர்வு நிறுவனங்களின் கூடுதல் செலவுகளை முழுமையாக ஈடுகட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்த பருவமழையும் சிமெண்ட் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழைக்காலத்தில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுவதால் சிமெண்டுக்கான தேவை குறையக்கூடும். இதன் காரணமாக அந்தக் காலகட்டத்தில் சிமெண்ட் விலை குறைந்ததுடன், நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
செலவுகள் அதிகரிப்பு மற்றும் பருவமழையின் தாக்கம் இருந்தபோதிலும், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் சிமெண்ட் விற்பனை அளவு 7 முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சி அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V